Wednesday

வியாபாரம் ஆக்கப்பட்ட கல்வி

தொலைகாட்சி பெட்டிகளில் செய்திகள் பார்த்தால் பெற்றோர்கள் கல்வி கூடங்களை முற்றுகை என்ற செய்தி தான் முதன்மை செய்தியாக வருகிறது. தமிழக அரசால் நியமிக்கப்பட்ட கோவிந்த ராஜன் கமிட்டி அறிவித்த கல்வி கட்டணமே உயர்வு என்று பொது மக்கள் மத்தியில் எண்ணங்கள் இருக்கிற போதே கல்வி நிறுவனங்கள் கோவிந்த ராஜன் கமிட்டியின் முடிவை ஒரு பொருட்டாகவே எடுக்காமல் அவர்கள் ஒரு கட்டணத்தை நிர்ணயித்து வசூலித்து வருகின்றனர்.

இந்த கட்டணம் மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமாக இருக்கிறது. பல பொற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப் பட்டு விடுமோ என்ற பயத்தில் மூன்று மடங்கு இல்ல ஆறு மடங்கு அதிகமாக இருந்தாலும் கட்டி விடலாம் என நினைத்து பல பெற்றோர்கள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் கட்டி விட்டார்கள். ஆனால் துணிச்சல் மிகுந்த பெற்றோர்கள் இந்த கல்வி கொள்ளைக்கு எதிராக போராடி வருகிறார்கள். அதன் விளைவு தான் தினம் தினம் நடைபெறும் போராட்டங்கள். பெற்றோர்களின் எந்தவிதமான போராட்டங்களுக்கும் அசராமல் கல்வி நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கு கட்டணம் வசூலிக்கின்றன.

கல்வி நிறுவனங்கள் தனியார் மயதிற்கு மாற்றப் பட்ட நாள் முதல் போட்டி போட்டு கல்வி நிறுவனங்களும் , வளர தொடங்கின, அதே போல் கல்வி கட்டணங்களும் உயர தொடங்கின. தனியார் கல்வி நிறுவனங்கள் மட்டுமல்லாது அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு நன்கொடை என்ற பெயரில் அதிக படியான பணங்களை வசூலித்து வருகின்றன. குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனம் , இந்த கல்வி கூடத்திலிருந்து ஒரு ஆண்டிற்கு முன்பு பத்தாம் வகுப்பு தேர்வில் ஒரு மாணவர் முதலிடம் பிடித்தார். ஏற்கனவே இந்த கல்வி நிறுவனத்திற்கு நல்ல பெயர் நல்ல படிப்பு, நல்ல ஒழுக்கம் போன்றவற்றால் பெற்றோர்கள் பிள்ளைகளை இந்த பள்ளியில் படிக்க வைப்பதில் மிகுந்த ஆர்வம கொண்டவர்களாக இருக்கிறார்கள். பொதுவாக மேல்நிலை கல்விக்கும், ஆறாம் வகுப்பிற்கும் எப்போதுமே கிராக்கி அதிகமாக இருக்கும். இதில் ஆறாம் வகுப்பு படிக்க வரும் மாணவர்களை நுழைவு தேர்வு வைத்து தான் தேர்ந்தெடுப்பார்கள் . இரண்டு பிரிவுக்குமாக சேர்த்து 14௦ பிள்ளைகளை நுழைவு தேர்வு மூலம் தேர்ந்தெடுப்பார்கள்.

நுழைவு தேர்வு மூலம் தெரிந்தேடுத்தால் காசு கொடுக்க வேண்டாம் என நினைக்க கூடாது. நுழைவு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கும் நபர் ஒன்றுக்கு கல்வி கட்டணம் போக ருபாய் ஆறாயிரம் (6௦௦௦)நன்கொடை. மீதி இருபது பிள்ளைகளை வேண்டப்பட்டவர்கள் அடிப்படையில் சேர்த்து கொள்வார்கள் அவர்களிடம் பத்தாயிரம் முதல் பதினையாயிரம் வாங்குகிறார்கள். இது போக கல்வி கட்டணம் கட்டியாக வேண்டும். சிறிய கிராமத்து பள்ளியே இந்த அளவிற்கு நன்கொடை வாங்குகிறது என்றால் அதுவும் அரசு உதவி பெரும் கல்வி நிறுவனம். மற்ற நிறுவனங்களை என்ன சொல்ல.

ஏன் இப்படி அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள்? மக்களின் சுயநலம் தானே இன்று எத்தனை மக்கள் கல்வி கட்டணங்களின் உயர்வை எதிர்த்து போராடுகிறார்கள்? ஒரு சதவீதம் கூட வரவில்லை கொஞ்சம் வசதி உள்ளவர்கள் எவ்வளவு கட்டணம் வசூலித்தால் என்ன நமது பிள்ளை நல்ல பள்ளியில் படித்தால் போதும் என்ற எண்ணம. பிள்ளைகளின் மீதும் பெற்றோர்கள் மீதுமான தன்னம்பிக்கை குறைவதால் இந்த பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்ற எண்ணம? போராடினால் படிப்பு வீணாகிடுமோ என்ற அச்சம். மக்கள் மத்தியில் மறைந்து போன போராட்ட குணங்கள். கேள்வி கேட்பதில் உள்ள பயங்கள் இவையெல்லாம் தான் தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கு கல்வி கட்டணங்களை உயர்த்த சாதகமாயிருக்கின்ற்ன.

இதே காரணங்கள் தான் தட்டி கேட்க வேண்டிய அரசுக்கும் சாதகமாக இருக்கிறது . அடுத்த நாங்களே ஆட்சிக்கு வந்தால் பொறியியல் கல்லூரிகளின் கட்டணங்களை உயர்த்தி ஆணை பிறப்பிக்கலாம் என பொறியியல் கல்லூரி முதலாளிகளிடம் உத்திரவாதம் கொடுத்ததாகவும் அரசால புரசலாக பேச்சு அடி படுகிறது. கோவிந்த ராஜன் கமிட்டி நிர்ணயித்த காட்டணத்தையே இன்னும் குறைத்து அரசாணை வெளியிட வேண்டும். சரியான ரசீது கொடுக்காமல் கட்டமா வசூலிக்கும் பள்ளி நிறுவனங்கள் மீதும், அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிறுவனங்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து கல்வி வியாபாரம் ஆவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

பெயரளவில் இருக்கும் சமச்சீர் கல்வி இன்னும் அனைத்து மக்களுக்கும் சமமான கல்வியாக அமைய சமச்சீர் கல்வி விரைந்து கட்டாயமாக அனைத்து கல்வி நிறுவனங்களிலும் செயல் படுத்தினால் மட்டுமே இதற்கு விடிவு காலம் வரும்.

1 கருத்துக்கள்:

எஸ்.கே said...

சிறப்பான கட்டுரை!

Post a Comment

Send your Status to your Facebook