Sunday

சங்கரன்கோயில் இடைத்தேர்தல் யாருக்கு வாய்ப்பு ?

தமிழக அமைச்சர் கருப்பசாமி மறைந்ததை அடுத்து சங்கரன் கோயில் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது . இன்னும் தேதி அறிவிக்காமலே சங்கரன்கோயில் இடைத்தேர்தல் களம சூடு பிடிக்க துவங்கியிருக்கிறது .   

பத்திரிக்கைகளிலும் விவாதங்களிலும் சங்கரன்கோயில் இடைத்தேர்தல் சூடு பிடிக்க துவங்கியிருக்கிறது . அதற்கான காரணம் கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிடாத மதிமுக சங்கரன்கோயில்தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் இடைத்தேர்தலுக்கு புதிய இலக்கணத்தை வகுத்து தமிழகத்தில் மோசமான முன்னுதாரணத்தை காட்டியது .  "திருமங்கலம் பார்முலா" என்று மோசடி வெற்றிக்கே முன்னுதாரணம் திமுக என்பதை இடைத்தேர்தல்கள் வரும் போது  நினைவு படுத்தாமல் இருக்க முடியாது . 

திமுகவிற்கு சிறிதும் சளைத்தது அதிமுக அல்ல என்பதை காட்டும் விதமாக வெற்றி பெற்றவுடன் தன்னுடைய பழைய அதே குணாதிசயங்களை கொண்டு அதே ஆணவத்தோடு ஆட்சி நடத்தி வரும் அதிமுக இந்த தேர்தலில் திமுகவின் "திருமங்கலம் பார்முலாவை " கடை பிடிக்க கூடும்.   
இந்த தொகுதிக்கு அதிமுக தன்னை தயார் படுத்தும் விதமாக இலவச மிக்சி , கிரைன்டர்கள்  அமைச்சர்கள் முன்னிலையில் இந்த தொகுதியில் கொடுக்க துவங்கி விட்டார்கள். இடைத்தேர்தலுக்கு முன்பு அணைத்து வீடுகளுக்கும் கொடுத்து முடிக்க வேண்டும் என்பது மேலிட உத்தரவாம் . 

இந்த நிலையில் நேரடியாக அதிமுகவோடு களத்தில் குதிக்கிறது மதிமுக. இந்த தொகுதியின் ஒரு சிறப்பு என்னவென்றால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த தொகுதி. இப்போதே இடைத்தேர்தலை சந்திக்க மதிமுக களத்தில் இறங்கி விட்டது. ஒன்றிய வாரியாக செயல் வீரர்கள் கூட்டம் கூட்டி தேர்தல் பற்றிய ஆலோசனைகள் நடந்து வருகிறது. 

கடந்த சட்டமன்ற தேர்தலில் மதிமுக போட்டியிடாமல் இருந்ததால் நடுநிலையாளர்கள் மத்தியில் மதிமுவிற்கு நல்ல வரவேற்பு இருந்ததை காண முடிந்தது . அதே போல் உள்ளாட்சி தேர்தலில் மதிமுக தனித்து போட்டியிட்டு எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றியை பெற்று அதிமுக திமுகவிற்கு அடுத்த படியான இடங்களை போட்டியிட்ட இடங்களில் பெற்றிருக்கிறது. 

சங்கரன்கோயில் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கட்சிகள் வாங்கிய ஓட்டுகளை அடிப்படையாக வைக்கும் போது ஓரளவிற்கு போட்டியில் யார் இருக்கிறார்கள் என்பதை கணிக்க முடியும். சங்கரன்கோயில் தொகுதியில் ஒரு நகராட்சி இரண்டு ஊராட்சி ஒன்றியங்கள் ஒரு பேரூராட்சி உள்ளன . இதில் அதிக வாக்குகளை கொண்ட குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் மதிமுக தான் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது . இன்னொரு ஊராட்சி ஒன்றியமான  மேலி நிலித நல்லூர்      ஒன்றியத்தில் அதிமுகவிற்கு அடுத்த இடத்தில் மதிமுக வாக்கு சதவீதங்கள் பெற்றிருக்கிறது. மதிமுகவிற்கு அடுத்து தான் திமுக தேமுதிக போன்ற கட்சிகள் வருகின்றன.  

மேலும் ஒரு பேரூராட்சி இந்த தொகுதியில் இருக்கிறது அந்த பேரூராட்சியில் மதிமுக வெற்றி பெற்றிருக்கிறது . மற்றும் சங்கரன்கோயில் நகராட்சியும் இந்த தொகுதியில் தான் வருகிறது. சங்கரன்கோயில் நகராட்சியில் இந்த தேர்தலில் மதிமுக சொல்லும்படியான வாக்குகள் வாங்க வில்லை . அங்கு போட்டியிட்ட வேட்பாளர் சரியில்லாததால் வாக்குகள் பெரிய அளவில் விழ வில்லை என சொல்லப்படுகிறது .
உள்ளாட்சி தேர்தலில் கட்சிகள் வாங்கிய வாக்கு சதவீதங்களை பார்க்கும்  போது அதிமுக முதல் இடத்திலும் மதிமுக இரண்டாவது இடத்திலும் திமுக மூன்றாவது இடத்தில் வருகிறது. இது தான் மதிமுகவினருக்கு உற்சாகம் கொடுத்திருக்கிறது. ஒரு சில சதவீதங்கள் மாறி மதிமுகவிற்கு வந்தாலே மதிமுக வெற்றி பெற்று விடும் என்று கணக்கு போடுகின்றனர்  மதிமுகவினர்.  

இப்போதைய சூழ்நிலையில் அதிமுக அரசு மீது மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். மக்கள் நல பணியாளர்கள் நீக்கம், பஸ் கட்டணம் , மின் கட்டண உயர்வு , பால் விலை உயர்வு போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளின் அதிருப்தி தேர்தலில் எதிரொலிக்கலாம். மக்கள் எதிர்ப்பை காட்ட இந்த தேர்தலை பயன் படுத்தினால் மதிமுக வெல்வது உறுதி.      

6 கருத்துக்கள்:

Anonymous said...

அருமையான அலசல்

ராஜன் said...

அதிமுக தோற்க வேண்டும் அப்போது தான் ஜெயா பாடம் படிப்பார்

ரஹீம் கஸ்ஸாலி said...

இடைத்தேர்தல் நியாயமாக நடக்கும் பட்சத்தில் ம.தி.மு.க., வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது.

Suresh Kumar said...

ஆம் ரஹீம் ......... தேர்தல் ஆணையம் நியாயமாக நடத்தும் என நம்புவோம்

Chezhiyan said...

ஜெயா கட்சிக்கு இது ஒரு சோதனை களம் என்பது நிச்சயம்,பார்ப்போம் என்னென்ன லீலைகள் அரங்கேறப்போகிறது என்று.

Suresh Kumar said...

ஆளுங்கட்சி அணைத்து வழிகளையும் பயன் படுத்த முயற்சிக்கலாம் . அதையும் மீறி மதிமுக வெற்றி பெற்றால் அது நிச்சயமாக மக்களின் வெற்றி தான்

Post a Comment

Send your Status to your Facebook