Sunday

கலைஞர் கருணாநிதிக்கு ஈழத் தமிழ்மகனின் உள்ளக்குமுறல் (கடிதம்)

பேரன்பும் பெருமதிப்புக்குமுரிய கலைஞர் கருணாநிதிக்கு, பாழடைந்துபோன எங்களுர் மாரியம்மனுக்கு ஒருவேளை கூழ் ஊற்றக்கூட வழியில்லாத துர்ப்பாக்கியர்களாய் சோதனை சுமந்து கொண்டிருக்கிறோம். ஏதோ உயிர்வாழ்கிறோம் என்பதைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவுமில்லை. உலகத்தமிழரின் தலைவர் என்று புகழப்படும் நீங்கள் நலமாயிருந்தால் தான் எம்மைப்போன்ற தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதால் உங்கள் நலத்துக்கு ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நிற்க, பட்ட கஷ்டமெல்லாம் சற்றும் விலகாமல் ஒட்டியுறைந்து தினமும் மனதை தைத்துக் கொண்டிருக்கின்றன. தாகம் தீர்க்க மழையில்லை. இரத்தம் குடிக்க குண்டு மட்டும் பொழிகிறது. எல்லாரும் ஏமாற்றுகிறார்கள். ஏன் நீங்கள் கூடத்தான். எம்மைப்பற்றி ஆக்ரோஷமாக பேசும் போதெல்லாம் எல்லாவற்றையும் மறந்து மனம் நிறைந்து களிக்கிறேன். காலம் தள்ளிப் போகும்போது உங்கள் வார்த்தைகளும் புளித்துப் போகின்றன. ஆயிரம் நுண் ஈட்டிகள் சேர்ந்து ஆழ்கலங்களை துளையிட்டு நகரும் ஒவ்வொரு நிமிடங்களிலும் மரண வேதனை தருவதுபோன்ற உணர்வுகள்... அதைத் தாங்க முடியாமல்...
உங்களுக்குத் தெரியாது ஐயா. அனுபவித்தால் தான் தெரியும்.

கண்ணீர் வடித்து வடித்து ஒருவேளை தண்ணீருக்கே தாய் தவித்திருக்க வற்றிப்போன அவள் மார்முலையை ஏக்கத்துடன் பார்க்கும் பிஞ்சுக்கு காலம் சொல்லப்போகும் பதில்தான் என்ன?

நாம் யாருக்கு என்ன கொடுமை செய்தோம்? யார் நிலத்தை நாம் பறித்தோம்? யார் உரிமைக்கு இடம் கொடுக்க மறுத்தோம்? சோதனை மாறிமாறி வரும் என்பார்கள். வருவதெல்லாம் இங்கு சோதனையாகத்தான் இருக்கிறது. போகட்டும்

இலங்கை அரசாங்கத்துக்கு நீங்கள் இருவார காலக்கெடு கொடுத்தீர்கள் அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் தமிழ் அமைச்சர்கள் பதவி விலகுவார்கள் என்றும் அறிவித்தீர்கள் ஏன் இப்போது மெளனம் காக்கிறீர்கள்?

இந்தியப் பிரதமரை சந்தித்தீர்கள் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை கூறினீர்கள் ஏன் இப்போது பதில்கேட்க மறுக்கிறீர்கள்? போராட்டத்துக்கு அழைத்தீர்கள் சங்கிலியாய் இணைந்த எம்சொந்தங்களைக் கண்டு அகமகிழ்ந்து ஆனந்தமடைந்தோம். ஏன் இடைநிறுத்தினீர்கள்?

எமது பிரச்சினை பற்றி நீங்கள் ஆற்றிய உரையை நெய்வேலி, அருப்புக்கோட்டை, பாலையப்பட்டி, மேட்டுப்பாளையம், விருதுநகர், சாத்தூர், சிவகாசி, இராசபாளையம், திருவில்லிப்புத்தூர் என எல்லா ஊர்களிலும் பிரசாரம் செய்து அந்த உரையை போட்டுக் காட்டினீர்கள். என்ன பயனாயிற்று?

எமது நாட்டின் தமிழ் அமைச்சர்கள் மீது எனக்கு துளியளவும் நம்பிக்கையும் இல்லை. அதனால் தான் உரிமையோடு உங்களிடம் கேட்கிறேன். நான் மட்டுமல்ல இங்கு இலட்சக்கணக்கானோர் உங்களின் மறுமொழிக்காகவும் அடுத்த அடிக்காகவும் காத்திருக்கிறோம்

காடு எம்மை அடைகாத்துக் கொண்டிருக்கிறது அந்தகாடு அழியும் நிலை என்று வருகிறதோ அன்று இடுகாட்டில்தான் நாம் தூங்கிக் கொண்டிருப்போம். அப்போது எமக்காக ஒரு கவிதை எழுதி தப்பித்து விடாதீர்கள்.

எம்மை ஏமாற்றத் துணிந்து எதிர்பார்ப்புகளை ஏமாற்றங்களாக்கிய ஒவ்வொருவருக்கும் இறந்த பின்னும் எம் ஆன்மா சாபமிடும். இது நிச்சயமான உண்மை.

கலைஞரே, நீங்கள் தூங்கிக் கொண்டிருப்பதாக பலர் சொல்லிக் கொள்கிறார்கள். எமது ஓலக்குரல் உங்களுக்கு தாலாட்டாய் கேட்கும் என நான் நினைக்கவில்லை. எம்மைக் காப்பாற்ற முடியாவிட்டால் சொல்லி விடுங்கள். கறைபடிந்த எமது வாழ்க்கைப் பயணத்தை அந்தக் கறையைக் கொண்டே புள்ளி வைத்து முடித்து விடுகிறோம். கோரத்தின் கைகளில் சிக்குண்டு அகோரமாய் கொடுமைப்படுத்தப்படுவதை விட மரணம் எவ்வளவோ சுகமானது

இந்தக் கடிதத்தை நீங்கள் வாசிக்கும்போது நான் உயிரோடு இல்லாமலிருக்கலாம் ஆனாலும் உயிருள்ள இந்த வரிகள் உங்கள் பதிலுக்காக காத்திருக்கும்
அன்பான நன்றிகள் எங்கள் மண் சார்பிலும் மக்கள் சார்பிலும் உங்களுக்கு! எங்களுர் மாரியம்மன் உங்களுக்கு என்றும் துணைநிற்கட்டும்

இப்படிக்கு,
ஓர் ஈழத்தமிழன்


நன்றி :தமிழ்வின்

உங்கள் ஓட்டுகளை மறக்காமல் தமிழ்மணத்திலும் தமிளிஷிலும் குத்துங்கோ

1 கருத்துக்கள்:

Anonymous said...

சிண்டு புது டில்லியில் இருக்கிறது,
புது டில்லி பார்ப்பன,மலையாளிகள்
கையில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு வெந்த புண்ணில் வேலைக் குத்தாமல் ,உலக அளவிலே நாம் செய்யக் கூடியதைச் செய்ய வேண்டும்.

Post a Comment

Send your Status to your Facebook