Saturday

ஈழத்தில் இனப் படுகொலையை கண்டித்து சென்னையில் தொடருந்து முற்றுகை போராட்டம்


ஈழத்தில் உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சென்னை மத்திய தொடருந்து நிலையத்தில் தொடருந்துகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய நூற்றுக்கும் அதிகமான வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கறிஞர்களின் போராட்டம் காரணமாக தொடருந்து போக்குவரத்தும் பேருந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஈழத் தமிழர்கள் மீதான இனப் படுகொலையைக் கண்டித்தும், சிறிலங்காவுக்கு இந்தியா ஆயுத உதவி வழங்குவதைக் கண்டித்தும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடந்த 11 ஆம் நாள் முதல் நாள்தோறும் ஒரு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தின் மூன்றாம் நாளான நேற்று வெள்ளிக்கிழமை தொடருந்து முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக நூற்றுக்கும் அதிகமான வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் போல் கனகராஜ் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து மத்திய தொடருந்து நிலையத்துக்கு பேருந்தில் சென்றனர்.

கையில் கறுப்புக் கொடி ஏந்தியவாறு சிறிலங்கா அரசையும் மத்திய அரசையும் கண்டித்து முழக்கம் எழுப்பியபடியே மத்திய தொடருந்து நிலையத்துக்குள் நுழைய முயற்சித்தனர்.

ஈழத் தமிழர்கள் மீதான படுகொலையைக் கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மனித நேயமற்றவர் எனச் சித்தரிக்கும் படங்கள் ஆகியவற்றையும் வழக்கறிஞர்கள் தாங்கி வந்தனர்.

வழக்கறிஞர்களின் போராட்டத்தையொட்டி மத்திய தொடருந்து நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

முழக்கம் எழுப்பியபடியே தொடருந்து நிலையத்திற்குள் நுழைந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் போல் கனகராஜ் சமூக நீதி வழக்கறிஞர் பேரவையின் தலைவர் கே.பாலு, வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் வேல்முருகன், முன்னாள் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தலைவர் கருப்பன், வழக்கறிஞர்களான அறிவழகன், அப்துல் ரகுமான், தமயந்தி, கோவி இராமலிங்கம், நளினி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் மற்றொரு பிரிவு வழக்கறிஞர்கள் காவல்துறையினரின் தடையையும் மீறி தொடருந்து நிலையத்துக்குள் புகுந்தனர். மூன்றாவது இரும்புப் பாதையில் இருந்து பெங்களூருக்குப் புறப்பட இருந்த தொடருந்தை விஜயேந்திரன், றஜினி, கயல், விவேகாவானன், செந்தில், திலகவதி, பொற்கொடி உள்ளிட்ட 20-க்கும் அதிகமான வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பல வழக்கறிஞர்கள் இரும்புப் பாதை முன்பு படுத்துக்கொண்டும், றஜினி என்ற வழக்கறிஞர் தொடருந்து முகப்புப் பெட்டி மீது ஏறி நின்றும் போராட்டம் நடத்தினர்.

இதனை அறிந்ததும் அங்கு விரைந்த காவல்துறையினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தனர்.

இப்போராட்டத்தால் தொடருந்து புறப்பட தாமதம் ஆனது. முன்னதாக வழக்கறிஞர்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அணிவகுத்துச் சென்றதால் அங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வழக்கறிஞர்களின் போராட்டத்தால் மத்திய தொடருந்து நிலையத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
செய்தி : புதினம்
படம் : புதினம்

1 கருத்துக்கள்:

Post a Comment

Send your Status to your Facebook