Saturday

முள் செடியை வீழ்த்தும் ஆயுதம் வைகோ! படபடக்கிறார் முத்துக்குமாரின் தந்தை- ஜூனியர் விகடன்-20.3.11

வெண்ணெய் திரண்டு வரும் வேளையில் தாழி தள்​ளாடும் நிலை என்பார்​களே... வைகோவின் அரசி​யல் வாழ்க்கையில் இத்தகைய துயரங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன!
கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக அ.தி.மு.க-​வின் கூட்டணியில் சிறிதளவும் மனக்கசப்பின்றி, ஆளும் கட்சியின் அத்தனை நெருக்கடிகளையும் சமாளித்து நின்ற வைகோ, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அல்லாட்டத்துக்கு ஆளாகினார். கடந்த தேர்தலில் 35 இடங்களில் போட்டியிட்ட ம.தி.மு.க-வுக்கு இந்த முறை மிகக் குறைவான இடங்களே பேசப்பட... மாநிலம் முழுக்க இருக்கும் வைகோவின் ஆதரவாளர்கள் முகம் வாடிப்போனார்கள்.
 
வாய் திறந்து பேசாவிட்டாலும் வைகோவுக்கும் இதில் சொல்லிக்கொள்ள முடியாத வேதனைதான். இந்த நிலையில் நெகிழவைக்கும் சம்பவம் ஒன்று நடக்க... முகம் மலர நிமிர்ந்து இருக்கிறார் வைகோ.
 
ஈழப் போராட்டத்துக்காகத் தீக்குளித்து இறந்த கொலுவைநல்லூர் கு.முத்துக்குமாரின் குடும்பம் வைகோவை நேரில் சந்தித்து ம.தி.மு.க-வில் தங்களை இணைத்துக்கொண்ட சம்பவம்தான் அது.
 
ஈழ ஆதரவுக் கட்சியினர் பலரும் முத்துக்குமாரின் தந்தை குமரேசனைத் தங்கள் பக்கம் இழுக்க எவ்வளவோ முயன்று பார்த்தார்கள். பண உதவிகளும் பதவி குறித்த உத்தரவாதங்களும்கூட அவரிடம் நடத்தப்பட்டன. ஆனால், 'கட்சிகளில் சேரும் விருப்பமே இல்லை. என் மகனின் தியாகத்தைத் தயவுசெய்து விலை பேசாதீர்கள்’ என மறுத்துவிட்டார் குமரேசன். இந்த நிலையில்தான் திடீரென ம.தி.மு.க-வில் ஐக்கியமாகி இருக்கிறார் குமரேசன்.
 
''காங்கிரஸ் - தி.மு.க. என்கிற முட்செடிகளை வெட்டி வீச, நம் கையில் கிடைத்திருக்கும் ஆயுதம் ம.தி.மு.க. தமிழகத்தின் அத்தனை பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்கும் ஒரே தலைவர் வைகோ மட்டுமே. இனத் துரோகிகளை வீழ்த்துவதற்கு வைகோவின் கரத்தை வலுப்படுத்துவதே சரியான வழி!'' என குமரேசன் ஆவேசமாக அறிவிக்க... நெஞ்சம் சிலிர்த்தார் வைகோ.
 
இணைப்பு விழாவில் பேசிய குமரேசன், ''எங்​களுடைய குடும்பம் ஒரு​போதும் அரசியலில் ஈடுபட்டது இல்லை. ஆனால், இந்தக் காலகட்டத்தில் முத்துக்குமாரின் தியாகத்தைப் போற்றுகின்ற, உண்மையாக ஈழ விடிவுக்குப் பாடுபடுகின்ற ஒரு இயக்கம் மதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நாங்கள் ம.தி.மு.க-வில் இணைந்து இருக்கிறோம்.
 
என் மகன் முத்துக்குமாருக்கு மிக நெருங்கிய நண்பராக இருந்தவர் பழனி என்பவர்தான். அவர்கள் இருவரும் சேர்ந்துதான் அரசியல் கூட்டங்களுக்குப் போய் நாட்டு நடப்புகள் குறித்துப் பேசுவார்கள். இறப்பதற்கு முதல் நாள்கூட முத்துக்குமார், பழனியிடம்தான் ஈழக் கோரங்கள் குறித்து குமுறி இருக்கிறார். அதனால், யாரை நம்பிக்கை மிகுந்த தமிழர் தலைவராக முத்துக்குமார் போற்றினார் என்பது பழனிக்குத்தான் தெரியும். பழனியும் எனது மருமகன் கருக்கவேலும் கலந்து பேசித்தான் ம.தி.மு.க-வில் இணையும் முடிவை எடுத்தார்கள்.
 
எனக்கும் அதுதான் மிகச் சரியான முடிவாகப்பட்டது!'' என நெகிழ்ந்த குமரேசன் சற்றே ஆவேசமாகி, ''ஈழத்தையே இழவுக்காடாக்கிய காங்கிரஸும், அதற்குத் துணைபோன தி.மு.க-வும் இந்த மண்ணில் அடியோடு வீழ்த்தப்பட வேண்டும். ஈழக் கோரத்தைத் தடுக்க நினைத்து உடலையே கரிக்கட்டையாக்கிய என் மகனைப்போல், எத்தனையோ இளைஞர்கள் இன்றைக்கும் கொந்தளிப்போடு இருக்கிறார்கள். இனியும் அரசியலுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என ஒதுங்கி இருந்தால், அநியாயம் புரிபவர்களின் ஆட்டம் அதிகமாகிவிடும் என்பதால்தான், அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கிறோம். குடும்பத்துக்காக சொத்துகளைக் குவிக்கிற தலைவர்களுக்கு மத்தியில், தமிழர் நலனை மட்டுமே தாரக மந்திரமாகக்கொண்டு இயங்கும் வைகோதான் உணர்வாளர்களின் உண்மையான தலைவர்!'' என்றார் சிலிர்ப்பு அடங்காமல்.
 
முத்துக்குமாரின் நண்பர் பழனிராசன், ''முத்துக்குமாரின் தியாகத்தை உலகறியச் செய்தவர் வைகோ. உண்மையான உணர்வோடு முத்துக்குமாரின் இழப்புக்கு வருந்திய தலைவர் வைகோவுக்கு நாங்கள் அனைவருமே நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். 'ஈழத் தமிழர்களுக்கான விடுதலையைப் பெற்றுத் தர தலைவர் வைகோவால் மட்டுமே முடியும்!’ என முத்துக்குமார் என்னிடம் பலமுறை சொல்லி இருக்கிறார். தலைவர் வைகோவின் பொதுக் கூட்டங்கள் எங்கு நடந்தாலும், நானும் முத்துக்குமாரும் சைக்கிளில் போய் அவருடைய பேச்சைக் கேட்போம்.
 
ஒருமுறை தலைவரின் பேச்சில் மெய் மறந்து, அது குறித்துப் பேசிக்கொண்டே இருந்தோம். அதன் பின் பார்த்தபோது சைக்கிள் காணாமல் போனது தெரிந்தது. அந்த அளவுக்கு தலைவர் வைகோவின் பேச்சில் வசப்பட்டுக்கிடந்தவன் முத்துக்குமார். அதனால்தான் அவனுடைய தியாகத்தைப் போற்றும் விதமாக ம.தி.மு.க-வில் இணைய வேண்டும் என முத்துக்குமாரின் மைத்துனர் கருக்கவேல் சொல்லிக்கொண்டே இருந்தார். முத்துக்குமார் ஊட்டிய உணர்வால்தான், இன்றைக்கு வைகோவின் தலைமையில் இந்த இயக்கத்தில் இணைகிறோம். எந்த சுயநலமும் இல்லாமல் வைகோவின் கரத்தை வலுப்படுத்த உறுதி ஏற்போம்!'' என்று சொல்ல வைகோவின் முகம் பரவசமானது.
 
இறுதியில் பேசிய வைகோ, முத்துக்குமாரின் நினைவுகளை அடுக்கிவிட்டு, முத்துக்குமாரின் தியாகத்தை இனத்தின் எழுச்சிக்காகப் பயன்படுத்து​வோமே தவிர, சுயநலத்துக்காக அல்ல!'' என்றார் உணர்ச்சிப்பெருக்கோடு!
 
- இரா.சரவணன்
 

 நன்றி ஜூனியர் விகடன் 

4 கருத்துக்கள்:

மதுரை சரவணன் said...

முத்துக்குமாரின் தியாகம் , வைகோவின் அரசியல் பாதையில் சரியாக பயன்படட்டும்..

ராஜ நடராஜன் said...

பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

அந்த தியாகியின் பெயரையும் அரசியல் செய்து கெடுத்து குட்டிச் சுவராக்கி விடாதீர்கள்.

ராம்ஜி_யாஹூ said...

கிடைக்கும் தொகுதிகள் எட்டு / ஏழு என்றாலும் அதிமுக கூட்டணியில் மதிமுக இருப்பதே அனைவர்க்கும் நல்லது
இல்லாவிடில் சுப்ரமணிய சாமி நிலை வைகோ விற்கு வந்து விடும்

Post a Comment

Send your Status to your Facebook