சங்கரன்கோவிலுக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கடந்த 10-ம் தேதி சென்னையில் கூடியது, ம.தி.மு.க. பொதுக் குழு. கட்சியின் இணையதள நண்பர்கள் 100 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தார்கள். கூட்டம் நிரம்பி வழிந்ததால், அனைவரிடமும் உற்சாகம் பொங்கி வழிந்தது.
கட்சியின் பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து தேர்தல் நிதியளிப்பைத் தொடங்கி வைத்தார். உடனே, பலரும் மேடையை நோக்கி முண்டியடித்தனர். அப்போது, மைக் பிடித்த திருச்சி ஷேக்முகமது, ''என்னுடைய நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒரு நாளைக்கு இரு முறை டயாலிசிஸ் செய்தாக வேண்டும். இதற்காக மட்டும் தினமும் 10 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. நம் இயக்கத்துக்கு இது நெருக்கடியான காலம் என்பதால், எல்லோரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும்'' என்று சொல்லி இரண்டு லட்சம் நிதி கொடுக்க... திடீரெனக் கூட்டம் விக்கித்து நின்றது. அதைத் தொடர்ந்து பொதுக்குழுவில் மொத்தம் 46.75 லட்ச ரூபாய் தேர்தல் நிதியாக சேர்ந்தது.
செந்திலதிபன் பேசியபோது, ''ஓர் ஆண்டுக்கு முன்பு நடந்த 19-வது பொதுக் குழுக் கூட்டம், மிகவும் இறுக்கமாக இருந்தது. கூட்டணியில் நம்முடைய கட்சிக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்கிற கேள்வி எல்லார் மனதிலும் ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால், நாம் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஆனது. ஆனால், தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராடி இருக்கிறோம். கடலூர் சேதத்தைப் பார்வையிடப் போனபோது வைகோவிடம் நிறையப் பேர், அவரை எம்.பி-யாகவே நினைத்துக்கொண்டு, 'நாடாளுமன்றத்தில் எங்கள் பிரச்னையை எடுத்துச் சொல்லுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்கள். இந்த நம்பிக்கைதான் நமக்குக் கிடைத்துள்ள வலிமை'' என்று குறிப்பிட்டார்.
அடுத்துப் பேசிய மல்லை சத்யா, ''காகத்துக்குப் பகலில் வலிமை, ஆந்தைக்கு இரவில் வலிமை. நிலத்தில் யானைக்கு வலிமை. நீரில் முதலைக்கு வலிமை. சங்கரன்கோவில் இடைத்தேர்தல், நம்மை வஞ்சித்தவர்களை வீழ்த்துவதற்கான ஒரு வாய்ப்பு. போட்டியாளர்களை வீழ்த்திக்காட்டும் வலிமை நம்மிடம் இருக்கிறது. அதைக் களத்தில் காட்டுவோம்'' என்று சூளுரைத்தார்.
நாஞ்சில் சம்பத் காரசாரமாகவே பேசினார். ''18 ஆண்டு கால ம.தி.மு.க. வரலாற்றில், ஒரு முக்கியமான கட்டத்தை இப்போதுதான் கடக்கப்போகிறோம். வருகிற நாட்கள் நமக்கான வசந்தகாலம். கவிஞர் தாமஸ் கிரே சொன்னதுபோல, 'சந்தர்ப்பங்கள் கிடைக்காவிட்டால், எந்த மனிதனும் சரித்திரம் படைக்க முடியாது’. அந்த சந்தர்ப்பம், நமக்கு இப்போது வாய்த்துள்ளது. மக்கள் இப்போது, வைகோ மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். கருணாநிதி, ஜெயலலிதா நாடகம் முடிவுக்கு வருகிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலைச் சந்திக்க 26 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து இருக்கிறார் ஜெயலலிதா. இதன்மூலம், வைகோவின் வெற்றியை ஜெயலலிதா ஒப்புக்கொண்டு விட்டார்'' என்று பேசியவர், திடீரென டிராக் மாறி, ''சிலர் இருட்டடிப்பு செய்வதால், நம்மைத் தோற்கடித்துவிட முடியாது. என் மனைவியின் தாலிக்கொடியை விற்றுப் பணம் தருகிறேன். தலைவா, நீ நமக்கெனத் தனித் தொலைக்காட்சி தொடங்கு'' என்று ஆக்ரோஷத்தோடு சொல்ல, அத்தனை பேரும் கைதட்டி வரவேற்றனர். மேடையில் இருந்த 'இமயம்’ ஜெபராஜ் மட்டும் நெளிந்தார்.
இரவு 7 மணிக்குப் பேசவந்த வைகோ, ''நம் மீது மக்களின் கவனம் திரும்பி இருக்கிறது. ஏழைத் தாய்மார்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். புதிய இளைஞர்கள் தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு மாற்றாக ம.தி.மு.க-வை மக்கள் நினைக்கிறார்கள். மத்திய அரசு தமிழகத்தை, தமிழர்களை வஞ்சித்து வருகிறது. தமிழினத்துக்கு எதிரான மத்திய அரசின் துரோகத்தில் தி.மு.க-வுக்கும் பங்கு உண்டு. அதே சமயம், எட்டு மாத கால அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் படும் வேதனைகளும் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன. பால் விலை, பஸ் கட்டணம் எல்லாம் விஷம் போல ஏறிக்கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில், அ.தி.மு.க-வுக்குத்தான் வெற்றி என்று சொல்லும் ஜெயலலிதா, வரட்டும் சங்கரன்கோவிலுக்கு! இந்தத் தொகுதியின் மூலை, முடுக்கெல்லாம் நமக்கு அத்துப்படி. இப்போதே அதிகாரத் துஷ்பிரயோகத்தைத் தொடங்கி விட்டார்கள். ஜெயலலிதாவின் ராசி எண் ஏழு வரும்படியாக, 34 பேர் கொண்ட அ.தி.மு.க. தேர்தல் குழு, 7-ம் தேதி கூட்டம் போடுகிறார்கள். 7-வது வார்டில் 7 நிமிடங்கள் வாக்கு கேட்டார்கள். தலைமைச் செயலகத்தை காலி செய்தது போல 26 அமைச்சர்களை வைத்து உருட்டி மிரட்டி விடலாம் என்று நினைக்கிறார். இவர்கள், திருமங்கலம் இடைத்தேர்தலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடியவர்கள். காசு பணம் கொடுத்து ஓட்டு வாங்க முயற்சித்தால், நானே களத்தில் நிற்பேன். திருச்செந்தூர் இடைத்தேர்தல் நடந்தபோது, எம்ஜிஆரின் மந்திரிகளையே கண்ணில் விரலைவிட்டு ஆட்டியவன் நான். அமைதியான முறையில் நியாயமாக வாக்கு கேட்போம். வன்முறை நிகழ்த்தப்பட்டால், உரிய பதிலடி கொடுப்போம். அதற்கான வியூகங்களை இப்போது வெளியில் சொல்ல முடியாது'' என்று சஸ்பென்ஸ் வைத்து, உரையை முடித்தார் வைகோ.
வைகோவின் ஏரியா என்பதால், ம.தி.மு.க-வுக்கு இந்தத் தேர்தல் மானப்பிரச்னை. அதனால், கட்சியின் 38 மாவட்ட அமைப்புகளுக்கும் பகுதி பகுதியாகப் பொறுப்பைப் பிரித்து, செயல் திட்டத்தோடு காத்திருக் கிறார்கள்.
அனல் பறக்கப்போகிறது!
நன்றி :ஜூனியர் விகடன்
0 கருத்துக்கள்:
Post a Comment