Saturday

அரசியல் தலைவர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்

தமிழீழ மக்களுக்காக தன் இன்னுயிரை அர்ப்பணம் செய்த அன்புச் சகோதரன் முத்துக்குமரன் அவர்களின் இறுதி ஆசையை நிறைவேற்ற துடிக்கும் மாணவர்களை சில அரசியல்வாதிகள் தமது அரசியல் அபிலாசைகளிற்காக பயமுறுத்துவதாக தெரியவருகிறது.

தனது உடலை வைத்து போராட்டத்தை கூர்மைப்படுத்தும் படி மாணவர்களுக்கு அன்பு வேண்டுகோள் விட்டுச் சென்ற தன் தோழமையின் பணி தொடர துடிக்கும் மாணவர்களை அந்த பணியை தொடராது தடுப்பதற்காக இந்த சதி திட்டம் நடாத்தப்படுகிறது.

உலகிலேயே மாணவ சக்தியால் சாதிக்க முடியாதது ஒன்றுமே கிடையாது. அந்த மாணவ சக்தி கிளர்ச்சி கொண்டால் தமிழீழத்தில் பாதி உரிமை கிடைத்துவிடும். இவ்வளவு காலமாக தமிழீழம் என்றால் என்ன? ஏன் அந்த மக்கள் போராடுகிறார்கள்? என்று தெரியாத மக்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அது எப்படி என்றால் தமிழக மக்களுக்கு தமிழீழத்தின் உண்மை செய்திகள் செல்வதில்லை என்பது தான் உண்மை. அரசியல்வாதிகள் தாம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்காக மக்களையும் மாணவர்களையும் பயன்படுத்துகிறார்களே தவிர மக்களுக்காக என்பது அரைக்கரை வாசியாகவே இருக்கிறது.

அந்தவகையிலே இன்று நம் முத்துக்குமாரின் வீரமரணம் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் சென்று தமிழீழப் பிரச்சனையை உணர்த்திக் கொண்டிருக்கிறது. அந்த வீரமரணத்தை அறிந்து மக்கள் கொந்தளித்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அவரின் தியாகத்தை கொச்சைப்படுத்தாதீர்கள். தமிழீழ தற்கொலைப்படையான கரும்புலிப்படைக்கு நிகரான ஒரு மரணத்தை இன்று தமிழகத்தில் நிகழ்த்தியிருக்கிறார் முத்துக்குமரன்.

அரசியல் வாதிகளே! மாணவ சக்தியை பயன்படுத்துங்கள். இந்த சந்தர்ப்பத்தை நீங்கள் தவறவிட்டீர்கள் என்றால் நீங்கள் தமிழினத்திற்கு செய்யும் துரோகமாக மாணவர்களாலும் அவர்களால் உருவாகும் எதிர்கால சமூகத்தாலும் சித்தரிக்கப்படுவீர்கள்.

கட்சி, அரசியல் என்ற பாகுபாட்டை தூக்கியெறிந்து நாம் எல்லோரும் தமிழர்கள் என்ற உணர்வோடு ஒன்றுபடுங்கள். முத்துக்குமாரின் அஞ்சலி நடக்கும் நிகழ்விடத்தில் மாணவர்கள் கூறுகிறார்கள் தன் உடலை வைத்து போராட்டத்தை கூர்மைப்படுத்த எங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

அவரின் இறுதி ஆசையை நிறைவேற்ற வேண்டிய கடமை எங்களுக்குள்ளதால் அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் தலையிடாமல் மாணவர்களாகிய எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

அதற்கு குறுக்கிட்ட அரசியல்வாதிகள் "நீங்களெல்லாம் என்ன செய்து கிழித்தீர்கள் ஈழப்பிரச்சனை பற்றி பேசுவதற்கு" என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். இதனால் மாணவர்கள் செய்வதறியாது திகைத்து போய் இருக்கிறார்கள்.

என்ன தோன்றுகின்றது என்றால் அரசியலால் சாதிக்க கூடியவற்றை அரசியலால் சாதியுங்கள். மாணவர்களால் சாதிக்க கூடியவற்றை மாணவர்களால் சாதியுங்கள். எல்லோருடைய நோக்கமும் தமிழீழம் கிடைக்க வேண்டும்.

தமிழீழ மக்கள் நிம்மதியுடன் வாழவேண்டும் என்றிருந்தால் போட்டி போடாதீர்கள். நெல்லை எந்த இயந்திரத்தில் குத்தினோம் என்கிறது நமக்கு முக்கியம் கிடையாது நமக்கு தேவை பயன் தரக்கூடிய அரிசி.

ஆகவே, தமிழர்களாகிய நாம் நமக்குள்ளேயே பிரிவினையை வளர்க்காமல் அன்பு சகோதரன் முத்துக்குமரனின் கனவு நனவாக பாடுபடுவோம்.

நன்றி : தமிழ் வின்

0 கருத்துக்கள்:

Post a Comment

Send your Status to your Facebook