Wednesday

அத்துமீறல்: காவல்துறை மன்னிப்பு கேட்க பெண்கள் அமைப்புகள் வலியுறுத்தல்

இன்று அதிகாலை 5.45 மணியளவில் உண்ணாவிரதப் பந்தலுக்குள் புகுந்த காவல்துறையினர் 5 பெண்களை கைது செய்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, பெண்களிடம் அத்துமீறி நடந்துக்கொண்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் அமைப்பை சேர்ந்த பேராசிரியர் சரஸ்வதி, நீலவேணி, பாண்டிமாதேவி, காமேஸ்வரி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், அங்கு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவருகிறோம்.
இதில் 20 பெண்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். தினந்தோறும் நூற்றுக்கணக்கான பெண்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர். இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வலியுறுத்த வேண்டும் என்று கோரி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். ஆனால் இதுவரை தமிழக அரசோ, மத்திய அரசின் பிரதிநிதிகளோ எங்களை வந்து சந்திக்கவில்லை; எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காவல்துறையின் அத்துமீறல்
இன்று 10வது நாளாக இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் உண்ணாவிரதப் பந்தலில் பெண்கள் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது சுமார் 150 போலீசார் ஷூ கால்களுடன் உள்ளே வந்து, தூங்கிக்கொண்டிருந்த பெண்களின் போர்வையை விலக்கி பார்த்து, ஓவ்வொரு பெண்களின் பெயர்களை கூறி அடையாளம் கண்டுபிடிக்க முயன்றனர். எங்களை கையை பிடித்து வலுக்கட்டாயமாக மேலே தூக்கினர்.

எங்களது மொபைல்களை பறித்துக்கொண்டனர். இதனால் நாங்கள் பத்திரிகையாளர்களையோ, தமிழ் ஆர்வலர்களையோ தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டு, அரசு முத்திரை இல்லாத, தேதி குறிப்பிடாத மொட்டைக் கடிதம் போன்ற ஓர் கடிதத்தை எங்களிடம் தந்தனர். இதுகுறித்து நாங்கள் ஆலோசித்து முடிவு செய்தவதாகவும், உண்ணாவிரதப் பந்தலைவிட்டு வெளியே செல்லும்படியும் காவல்துறையை எச்சரித்தோம்.

உடனே அவர்கள், எங்களை கைது செய்வதாக கூறினர். நாங்கள் கழிவறைக்கு சென்றுவிட்டு, உடை மாற்றிவிட்டு வருவதாக கூறினோம். எனினும், கழிவறைக்கு சென்ற பெண்களுடன் ஆண் காவலர்கள் சென்றனர்

நாங்கள் உடைமாற்றுவதற்காக திரைச்சீலையால் ஓர் தடுப்பை ஏற்படுத்தி வைத்திருந்தோம். அந்த திரைச்சீலையை அகற்றிவிட்டு, எங்களை உடைமாற்ற முடியாமல் செய்தனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் எங்களிடம், "நன்றாக சாப்பிட்டீர்களா?" என்று கேட்டு அவமானப்படுத்தினர்.

போராட்டம் தொடரும்
பின்னர், தாங்கள் அழைத்து வந்திருந்த ஓர் மருத்துவரிடம், எங்கள் அனைவரையும் மருத்துவப் பரிசோதனை செய்யும்படி கூறினர். நாங்கள் மறுத்ததால், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள 5 பேரை கைது செய்வதாக கூறி அழைத்துச் சென்றனர். யாரையெல்லாம் கைது செய்து அழைத்து செல்கிறீர்களோ அவர்களது பெயர் பட்டியலை தாருங்கள் என்று கேட்டோம். இதற்கு காவலர்கள் மறுத்தனர். இதனால் நடுரோட்டில் சுமார் 2 மணி நேரம் அவர்களுடன் போராடினோம். அதன்பின்னரே, அவர்கள் தந்த மொட்டை கடிதத்தின் பின்புறம், 5 பேரை கைது செய்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக எங்களிடம் எழுதித் தந்தனர்.

இதுபோன்ற அத்துமீறல்கள், அநாகரிகச் செயல்கள் மூலம் எங்களது போராட்டத்தை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால், சாகும்வரை எங்களது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்.

காவல்துறை மன்னிப்பு கேட்க வேண்டும்
இரவு உடையில், சோர்வாக தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் அத்துமீறி, அநாகரிகமாக நடந்துக்கொள்ள எந்த சட்டம் இவர்களை அனுமதித்தது?.

இந்த சம்பவத்துக்காக காவல்துறையை நாங்கள் கண்டிக்கிறோம். நடந்த சம்பவத்துக்காக காவல்துறை மன்னிப்பு கேட்கவேண்டும். காவல்துறையை தனது பொறுப்பில் வைத்திருக்கும் முதல்வர் கருணாநிதி வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

வேலை நிறுத்தம் ஓர் நாடகம்
இலங்கைத் தமிழர் பிரச்சனைகாக முதல்வர் கருணாநிதி நாளை வேலை நிறுத்தம் அறிவித்துள்ளார். இதே பிரச்சனைக்காக தான் நாங்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளோம். இந்த சூழ்நிலையில் எங்களிடம் அத்துமீறல் நடந்துள்ளது. எனவே,முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ள இந்த வேலை நிறுத்தம், மக்களிடம் ஓட்டுவாங்குவதற்காக முதல்வர் கருணாநிதி நடத்தும் ஓர் நாடகம். பெண் உரிமைக்கு மரியாதை கொடுப்பதாக கூறிக்கொள்ளும் முதல்வர் கருணாநிதி, பெண்களிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்ன முதலில் காவல்துறைக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

திசை திருப்பும் முயற்சி

இதுபோன்ற அராஜக, அநாகரிக செயல்கள் மூலம், இலங்கை தமிழருக்கான இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை, பெண்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையேயான மோதலாக திசை திருப்ப முயற்சி நடக்கிறது. இந்த முயற்சிக்கு நாங்கள் ஒருபோதும் பலியாக மாட்டோம்.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்ற எங்களது கோரிக்கை நிறைவேறும்வரை, எங்களது சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடரும். இவ்வாறு பெண்கள் அமைப்பினர் கூறினர்.

நன்றி : தமிழ் வெப் துனியா


கலைஞர் அவர்களே வழக்கறிஞர் போராட்டத்தை திசை மாற்றியது போல் பெண்களின் போராட்டத்தையும் திசை மாற்ற முயற்சிப்பதை விட்டு விட்டு போர்நிறுத்தம் ஏற்பட முயற்சியுங்கள் . இல்லை அதை விட்டு நான் எப்பவுமே துரோகியாதன் வாழ விரும்புகிறேன் என்றால் நாங்கள் என்ன பண்ண முடியும் இந்த லட்சணத்தில நாள வேலை நிறுத்தமா ?

0 கருத்துக்கள்:

Post a Comment

Send your Status to your Facebook